செயல்பாடுகள்

நூலகக் கட்டமைப்பு

தமிழ் நாட்டில் பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் 4,640 பொது நூலகங்களில் 1,780 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2,532 நூலகங்கள் வாடகையில்லா இலவசக் கட்டடங்களிலும், 314 நூலகங்கள் தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருவதோடு, 14 நடமாடும் நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

கணினிமயமாக்கம்:

மாநில மைய நூலகமான கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் இராஜா  ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் இணை மானிய நிதியுதவியின் அடிப்படையில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட வசதிகளுடன் பொது நூலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னிமாரா பொது நூலகத்துடன் மாவட்ட மைய நூலகங்கள் அனைத்தும் இணையதள இணைப்பு வாயிலாக இணைக்கப்பட்டு, அந்நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய தகவல்களை இணையதளம் வாயிலாக பொது மக்கள் அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாசகர் வட்டம்:

நூலகச் செயல்பாடுகளில் பொதுமக்களின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும் வகையில், அனைத்து நூலகங்களிலும் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், நூலக உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கொண்டு  “வாசகர் வட்டம்” என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

புதிய நூலகங்கள் உருவாவதற்கும், பொது மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்தி, நூலகத்தை வாசகர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், புத்தகங்களுக்கும் வாசகர்களுக்குமான பிணைப்பினை உறுதிப்படுத்துவதற்கும், பொது நூலகத் துறையுடன் கைகோர்த்து துணை நிற்கும் வாசகர் வட்டங்கள் வாயிலாக புதிய நூல்கள் மற்றும் படைப்பாளிகள் அறிமுகம், இலக்கியச் சொற்பொழிவு, புத்தகக் கண்காட்சி, மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கதை சொல்லுதல், வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத நிகழ்ச்சிகள் அனைத்து நூலகங்களிலும்  நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்தில் நூலக இயக்கம் வளர மிகுந்த முனைப்பும், ஈடுபாடும் கொண்ட வாசகர் வட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலுள்ள  வாசகர் வட்ட அமைப்புகளில்,   சிறந்த முறையில் செயல்படும்  வாசகர் வட்டத்தினை கவுரவிக்கும் வகையில்,  மாவட்டத்திற்கு தலா ஒரு விருது வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

நூலக உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை:

மக்களின் தேவைகளை அறிந்து, நூலகச் சேவையினை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கு, பொது நூலகங்களில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கையினை  துரித ப்படுத்துவது மிகவும் அத்தியாவசியமாகும். பொது நூலகத் துறையின் தீவிர முயற்சியின் காரணமாக,  2020-2021-ஆம் ஆண்டு  வரையில் 9981412   உறுப்பினர்கள் மற்றும்  138019 புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.